வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1 முதல் தொடங்கலாம் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்றும் CBSE அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான விரிவான தேர்வு அட்டவணையையும் CBSE அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாமா? என்பது பற்றியும், வரும் கல்வியாண்டுக்கான ( 2021-2022 ) வகுப்புகளை எப்போது துவக்கலாம்? என்பது பற்றியும் பெரும்பாலான CBSE பள்ளிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும், அதன் பின் தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றும், கற்றல் இடைவெளியைக் கண்டறிய தேர்வு நடத்துவது அவசியம் என்றும் CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் பட்சத்தில், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரிடத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி கற்றல் இடைவெளியைக் களைய முனைப்பு காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள CBSE, மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், எழுத்துத் திறனை மேம்படுத்தவும் நேரடி வகுப்புகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் கல்வியாண்டுக்கான ( 2021-2022 ) வகுப்புகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்தந்த மாநில அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் துவக்கிக் கொள்ளலாம் என்றும் CBSE தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்
Advertisement: