இந்தியா கட்டுரைகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வங்கத்தின் சிங்கப் பெண் மமதா பானர்ஜி!


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

இடதுசாரிகளின் கோட்டை என்றிழைக்கப்பட்ட மேற்கு வங்கத்தை இன்று திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக மாற்றி சாதனைப்படைத்துள்ளார் மமதா பானர்ஜி.

இந்த தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தை கைபற்ற எடுத்த முயற்சிகளை முறியடித்து நடைபெற்று முடிந்த மேற்கு வங்க தேர்தலில் தனி பெரும்பான்மையில் வெற்றிபெற்று 3-வது முறையாக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ளார் மமதா பானர்ஜி.

இடதுசாரிகள், காங்கிரஸ் என அரசியல் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் 1997-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தனிப்பெண்ணாக தொடங்கியவர் மமதா. கட்சி தொடங்கி கடந்த 24 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் அரசியல் போக்கை மாற்றியுள்ளார் அவர்.

இன்றைக்கு தேசிய அரசியல் போக்கையை தீர்மானிக்கும் மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றியுள்ளார் அவர். அரசியல் சார்ந்த போராட்டங்களில் சமரசமின்றி களத்தில் மக்களுடன் சேர்ந்து போராடுபவர் மமதா. அவரின் இந்த போராட்ட குணம்தான் மமதாவை நாடு முழுவதும் அறியப்பட்ட அரசியல் தலைவராக மாற்றியது.

யார் இந்த மமதா பானர்ஜி?

கொல்கத்தாவில் 1955-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடுத்தர பிரமாண குடும்பத்தில் பிறந்தவர் மமதா பானர்ஜி. ஜொக்மயா கல்லூரியில் இளங்கலை படித்துக்கொண்டிருந்தபோது தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அதன்விளைவாய் கல்லூரியின் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மமதா பானர்ஜி. 1970-வது காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியில் அரசியல் ஆர்வம் கொண்ட இளம் பெண்ணாக வலம் வந்தார். ஆனால் மமதாவின் மீதான பத்திரிகைகளின் பார்வை 1975-ம் ஆண்டு அரசியல் போராளியான ஜெயப்பிரகாஷ் நாராயணை விமர்சிக்கும் வகையில் கார் ஒன்றின் மீது ஏறி மமதா நடனமாடினார்.

மமதாவின் இந்த வித்தியாசமான எதிர்ப்பு அவரை உள்ளூர் பத்திரிகைகளில் இடம்பெறச் செய்தது. இதன்காரணமாக அவர் உள்ளூர் காங்கிரஸார் மத்தியில் பிரபலமாக்கியது. பின்னர் 1980-களில் மேற்கு வங்க மகளிர் காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார்.

முதல் அரசியல் பயணம்

1984-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியை வீழ்த்தி தன்னுடைய அதிகாரப்பூர்வ அரசியல் பயணத்தைத் தொடங்கினார் மமதா.

மமதா பானர்ஜியின் இந்த முதல் வெற்றிதான் அவரை நாடு முழுவதும் திரும்பி பார்க்கவைத்த முக்கிய நிகழ்வாகும். அதேபோல் அந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் வயது உறுப்பினர் என கௌரவிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் மமதாவின் கால்கள் எப்போதும் மேற்கு வங்கத்தைவிட்டு விலகியது இல்லை. மாநிலத்தில் இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டங்களை உருவாக்குவதிலும் பெரும்பாலான போராட்டங்களில் கலந்துகொள்வதிலும் மமதா தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.

மமதாவின் சபதம்

மத்திய இணை அமைச்சராக 1993-ம் ஆண்டு மமதா பானர்ஜி இருந்தபோது மேற்கு வங்கத்தின் முதல்வராக ஜோதிபாசு இருந்தார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்து முதல்வர் அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது மமதா காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது ‘நான் மீண்டும் இந்த கட்டடத்தில் முதலமைச்சரான பிறகே காலடி எடுத்துவைப்பேன்’ என சபதமேற்றார் மமதா. இதனிடையே காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 1997-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிறுவினார். ஏற்கனவே மமதாவுக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கு காரணமாக அவருடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிழக்கு மேற்கு வங்கத்தில் குறுகிய காலத்தில் செல்வாக்கைப் பெற்றது.

1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார் மமதா. இந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக பெண் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார்.

2005-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகள் தொடங்க இடதுசாரி அரசு நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது. அரசின் இந்த நடவடிக்கை மமதாவை மீண்டும் கள செயல்பாட்டில் அதிகளவு ஈடுபடவைத்தது. இதன்தொடர்ச்சியாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நாற்காலிகளை உடைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நில கையகப்படுத்துவதற்கு எதிராக நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தின்போது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் மமதா. மமதா பானர்ஜியின் இந்த போராட்ட முறை அவரை மேற்கு வாங்கத்தின் ‘வங்க புலியாக’ மாற்றியது. இது இடதுசாரி அரசின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நான் வந்துட்டேன்னு சொல்லு

பின்னர் 2009-ம் ஆண்டு தேசிய காங்கிரஸ் கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார் அவர். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ரயில்வே அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் 2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவுச் செய்தார் மமதா பானர்ஜி. அம்மாநிலத்தில் உள்ள 294 தொகுதியில் 227 இடங்களில் மகத்தான வெற்றிபெற்று தனிபெருபான்மையுடன் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார் மமதா பானர்ஜி.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ‘நான் மீண்டும் வந்தால் முதல்வராகத்தான் வருவேன்’ என அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை நிறைவேற்றியும் காட்டினார். இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தை தன்னுடைய லட்சிய போராட்டத்தில் சமரசத்திற்கு இடமில்லாமல் அதில் வெற்றியும் பெற்றார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்துவருகிறார் மமதா பானர்ஜி. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இம்முறை மமதாவை எதிர்த்து பாஜக தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தியது.

மமதா சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுபவர் என தங்களுடைய பிரச்சாரத்தில் முழங்கினார்கள் பாஜகவினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘நான் ஒரு பிரமாணப் பெண், எனக்கு இந்து தர்மத்தை பாஜகவினர் கற்றுக்கொடுக்க வேண்டாம்’’ என பதில் தாக்குதல் நடத்தினார்.

மூன்றாவது முறை முதல்வராக

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட விபத்து காரணமாகச் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டார். மமதாவின் வலது கையாக இருந்த சுவேந்து அதிகாரி இந்த தேர்தலில் பாஜகவில் இணைந்தார். மமதா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆயிரம் வாக்குகள் மேல் பெற்று மமதாவை தோற்கடித்தார்.

ஆனால் நந்திகிராமில் மமதா தோல்வி அடைந்தாலும் மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் 3- வது முறையாக ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுபேற்க உள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் தன்னுடைய இலக்கு என சபதம் ஏற்றுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த நாடு முழுவதிலும் 3-வது அணி அமைந்தால் அப்போது பிரதமர் பதவிக்கான தேர்வில் மமதா பானர்ஜி தவிர்க்க முடியாதவராக இருப்பார் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

Ezhilarasan

”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!

Jayapriya

’இந்தியன் 2’ பிரச்னை: சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி !

Karthick