செஞ்சியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் “நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல புரட்சிவாதிகள்” என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செஞ்சியில், விவசாயி சின்னத்தில் போட்டியிடும் அபூ.சுகுமாரை ஆதரித்து திறந்த வேனில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல புரட்சிவாதிகள்” என கூறியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். ஆட்சி மாற்றம் முக்கியமல்ல அரசியல் மாற்றம் மிக முக்கியம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல புரட்சிவாதிகள். லஞ்சம் ஊழல் அதிக அளவில் உள்ளது. மாற்றம் என்பது அதிமுக அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல, மாற்று அரசியலை கொண்டுவருவது. புரட்சி என்பது இரத்தம் சிந்துவது மட்டும் இல்லை வெளிப்படையாக அநீதியை அகற்றி புதிய தேசம் அமைக்க போராடுவது. நாங்கள் ஆட்சி வந்தவுடன் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்குவோம். முதல் குடிமகனுக்கு என்ன மருத்துவம் கிடைக்கிறதோ சாதாரண குடிமகனுக்கும் அதே மருத்துவம்ன கிடைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையில் முதன்மையானது. அரசு அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “அமைச்சர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும். உலகத்திற்கு அறிவைக் கடன் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும் மாறுதல் வரவில்லை. பரம்பரை காலங்காலமாக திமுக, அதிமுக என்றுதான் மாறியுள்ளது. இம்முறை உறுதியாக நாம் தமிழர் வெல்லும். நாம் தமிழரின் வெற்றி, தேர்தல் வெற்றி அல்ல வரலாற்று புரட்சியின் வெற்றி.” என்றும் சீமான் கூறியுள்ளார்.
Advertisement: