அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் என்ஜின் கோளாறு காரணமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
யுனைடைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 231 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹொனலுலு விமான நிலையத்திற்கு சனிக்கிழமை புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜின் ஒன்று தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட பயணிகள் அச்சமடைந்து என்ஜினை வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து எரிந்த என்ஜினின் உதிரிகள் வானிலிருந்து கீழே விழத் தொடங்கியுள்ளன.
பயணிகளின் கூச்சலை அறிந்த விமானிகள், விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். இந்த சம்பத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டாலும், எரிந்த என்ஜினின் உதிரி பாகங்கள் ப்ரூம்ஃபீல்ட்டின் குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Advertisement: