தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் போட்டியிடும் தொகுதியில் 50-ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் தன்னை வெற்றிபெறச் செய்வார்கள் என கூறியுள்ளார்.
சென்னை அடையாற்றில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் தனது குடும்பத்துடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தேர்தலில் மக்கள் பெருவாரியான நல்லதொரு மாற்றத்தை உருவாக்குவார்கள். ஆட்சி மாற்றம் என்னவென்பது மே 2-ம் தேதி தெரியும். தீ சக்தியையும் துரோகம் செய்தவர்களையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. அதிமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவுச் செய்துவிட்டார்கள். சதிகளை முறியடித்து அமமுக வேட்பாளர்கள் சிறப்பாகப் பணிபுரிகின்றனர். ஒரு சில வேட்பாளர்கள் விலை பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்” என அவர் கூறினார்.
கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி தினகரனை எதிர்த்து அதிமுக சார்பில் கடம்பூர் ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.சீனிவாசன், மநீம கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
Advertisement: