அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழக சட்டப் பேரவைக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று தன்னுடைய வேட்புமனுவை பகல் 1.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்பட்டி தொகுதி மக்கள் எனக்கு சிறப்பான வெற்றியை தேடித் தருவார்கள் என நம்புகிறேன்.
தமிழக அரசுக்கு 7 லட்சம் கோடி கடன் உள்ளது. இலவசத் திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலைதான். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது வருங்கால தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். தமிழக மக்கள் தன்னிறைவு பெற்று வாழ வேண்டுமென்றால் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். அதனை நிச்சயமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று செய்து தரும்” என்றார்.
கோவை தெற்கு கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்
அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு கமல்ஹாசன் செல்கிறார். கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திற்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.