கட்டுரைகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?


எல்.ரேணுகா தேவி

கட்டுரையாளர்

தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இத்தேர்தலில் 6,29,43,512 பேர் மொத்த வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில் 3.09 கோடி ஆண் வாக்காளர்களும் 3.19 கோடி பெண் வாக்காளர்களும் 7,192 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. பெண்களுடைய இந்த பத்து லட்சம் வாக்குகள் தமிழகத்தை யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் .

அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச சிலிண்டர், வாஷிங்மெஷின் ,உரிமைத்தொகை மற்றும் ஊக்கத்தொகை என பல அதிரடியான அறிவிப்புகளைத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அளித்துள்ளனர்.அதேநேரம் பெண்களுடைய முன்னேற்றம் உண்மையில் அவர்களுக்கு இலவச பொருட்களை வழங்குவதில் அடங்கியுள்ளதா அல்லது அரசியல் தளங்களில் பெண்களுக்கான உரிய இடங்களை வழங்குவதில் அடங்கியுள்ளதா என்பது விவாவதப்பொருளாகியுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்காகச் சிறப்பான திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எத்தனை பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை வெறும் ஒற்றை இலக்க சதவீதமாக உள்ளது. அஇஅதிமுக இத்தேர்தலில் வெறும் 15 பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளனர். தொழில்துறை அமைச்சராக இருந்த நிலோஃபர் கபிலுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா தலைமையில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தபோது சட்டப்பேரவையில் பெண்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டு 24 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இத்தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளில் 12 பெண்கள் வேட்பாளர்கள் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டனர். பின்னர் ஆத்தூர் தனி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டு அத்தொகுதியில் கு.சின்னத்துரை வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் திமுகவில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.பாஜக சார்பில் குஷ்பு, வானதி, சி.கே.சரஸ்வதி என 3 பெண் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகிறார்கள். பாமக சார்பில் திலகபாமா மட்டுமே போட்டியிடுகிறார்.

தேமுதிகவில விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் உட்பட 7 பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அமமுக 14 வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் மட்டும் விஜயதாரணி நிறுத்தப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் பொது தொகுதியில் மாதர் சங்க தலைவர் பொன்னுத்தாய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் 234 தொகுதிகளில் 117 பெண் வேட்பாளர்களுக்கு சமவாய்ப்பு வழங்கியுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகள் குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தியது மட்டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோனோர் 46 தனி தொகுதிகளில்தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். அதேபோல் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கியமான அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.

நாட்டின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக முத்து லட்சுமி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தற்போதுவரை தமிழக சட்டப்பேரவையில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கூட எட்டவில்லை. உள்ளாட்சித் துறைகளில் பெண்கள் 33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

பெண்களின் முன்னேற்றத்தை வளர்த்தெடுக்க இலவச அறிவிப்புகள் மட்டுமல்லாது பெண்களை அரசியல்படுத்துவதும் ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உருவாக்குவதும் பெண் முன்னேற்றத்தை வலியுறுத்தும் அரசியல் கட்சிகளின் கடமையாகும்.

Advertisement:

Related posts

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

Jayapriya

பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ஆம் தேதி தொடக்கம்!

Dhamotharan

யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்!

Niruban Chakkaaravarthi