செய்திகள் முக்கியச் செய்திகள்

மத்திய அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைக்கிறது: ராகுல்

மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி பங்கேற்றார். தொடர்ந்து தமிழகத்தில் 2வது கட்டமாக ராகுல் காந்தி இன்று தூத்துக்குடியிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ராகுல்காந்தி தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி. கல்லூரிக்கு காரில் அழைத்து செல்லப்பட்ட ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார். வழக்கறிஞர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார். அப்போது, இந்தியாவில், பத்திரிக்கை, நீதித்துறை என அனைத்து துறைகளையும் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இதற்கான அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து, தூத்துக்குடி கோவங்காடு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, உப்பள தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.இதையடுத்து, முக்காணி, ஆத்தூர், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவேனில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து, நாசரேத்தில் உள்ள பழமையான தேவாலயத்தில் அவர் பிரார்த்தனை செய்தார். ராகுல்காந்திக்கு பேராலயம் சார்பில் புனித பைபிள் பரிசாக வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வள்ளியம்மாள்புரம் பகுதியில் சென்ற ராகுல்காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள கடையில் நிர்வாகிகளுடன் அவர் தேநீர் அருந்தினார்.

இதையடுத்து, சாத்தான்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார்.தமிழர்களின் உணர்வை மோடி புரிந்து கொள்ளவில்லை என சாடிய ராகுல்காந்தி, தமிழர்களை யாராலும் அடக்க முடியாது என தெரிவித்தார்.

பரப்புரைக்கு நடுவே, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

“ராகுல் காந்தியின் வருகையால் தமிழக காங்கிரசில் எழுச்சி ஏற்படும்” -குண்டுராவ்

Jeba

மின்னணு கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மஞ்சள் நிற கார்!

Niruban Chakkaaravarthi

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியாகிறது!

Saravana