வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தலைவர்கள் இயற்கையாக மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், அம்மா ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் படி, இனி தமிழ்நாட்டில் இனி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தினுடைய தலைவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
குடும்பத்தின் தலைவர் இயற்கையாக மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், விபத்தில் மரணமடைந்தால் அவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தாலோ அல்லது விபத்துக்கு முன்பிருந்தவாறு உறுப்புகள் செயல்படாமல் போனாலோ இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம்.
இந்த இழப்பீட்டுத்தொகையை இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான எல்.ஐ.சி. ஆப் இந்தியா மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வழங்கும். நபர் ஒருவருக்கு பிரிமியத்தொகை குறைந்த அளவு ஆனாலும், அரசே இந்த திட்டத்திற்கான பிரிமியத்தை ஒவ்வொரு வருடமும் செலுத்துவது இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் வாழும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள 55 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவர்.
Advertisement: