தமிழகம் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கடந்த நவம்பர் மாதமே சூடுபிடிக்கத் தொடங்கியது. அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் தற்போதே அமலுக்கு வந்துவிட்டன. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19, வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி நடைபெறும். திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தேர்தலுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும், வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ. 30.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரளா, புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அசாம் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 27 முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 1 இரண்டாம் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 6ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தலும் நடைபெறும்.

மேற்கு வங்கத்திற்கு மார்ச் 27ஆம் முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 1 இரண்டாம் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 6ஆம் தேதி மூன்றாம் கட்டமும், 10ஆம் தேதி நான்காம் கட்டமும் தேர்தல் நடைபெறும். அடுத்தடுத்த கட்டத் தேர்தல்கள் ஏப்ரல் 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Advertisement:

Related posts

பலர் ஏசி அறையில் இருந்து கொண்டே உடனடி முதலமைச்சராக வர நினைக்கிறார்கள்! : அமைச்சர் செல்லூர் ராஜூ

Saravana

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!

Nandhakumar

கொரோனா சுகாதார நடவடிக்கைகளால் புற்றுநோய் ஏற்படுமா?

Jayapriya