கட்டுரைகள் செய்திகள்

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயஸ்ரீயின் நேர்காணல்!


வெ. காயத்திரி

கட்டுரையாளர்

மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு, அந்த மொழியில் இருக்கின்ற சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துவருபவர்தான் கே.வி. ஜெயஸ்ரீ .

திருவண்ணாமலையில் வசித்துவரும் ஜெயஸ்ரீ, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்பாளராகவும் 16 ஆண்டுக் காலம் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்று வருகிறார். இவர் இதுவரை 13 நூல்களை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

2016ஆம் ஆண்டு இவர் மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலுக்கு 2019ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

வளரும் ஆளுமைகளும் News 7 தமிழின் 7 கேள்விகளுக்கு இந்த வாரப்
பகுதியில் எழுத்தாளர் ஜெயஸ்ரீயின் பதில்கள்.

நேர்காணல் : வெ. காயத்திரி, நியூஸ்7 தமிழ்

1) சாகித்திய அகாடமி விருது பெற்ற பிறகு உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளிலே, இப்பவும் கூட நினைச்சு பார்த்தால் மகிழ்ச்சி அளிக்கிற சம்பவம் ஏதாவது இருக்கா?

விருது கிடைத்த ஒரு மணிநேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அழைச்சு வாழ்த்து சொன்னது, அடுத்தநாள் காலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைத்துப் பேசியது என மகிழ்வை ஏற்படுத்திய தருணங்கள்.

அப்புறம் என் குடும்பத்தைப் போல நான் பணியாற்றி வரும் பள்ளியிலும், என் மாணவர்கள் அதிகமாக என்னைக் கொண்டாடித் தீர்த்தார்கள். “எங்களோட வாட்ஸ் அப் டிபில எல்லாம் உங்க புகைப்படம்தான் வெச்சிருந்தோம்னு” மாணவர்கள் வந்து
சொல்லும்போது என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

டெல்லியில விருது வாங்க முதல்முறையா விமானத்தில பயணிச்ச அனுபவம் எப்படி இருந்ததுனு என் மாணவர்கள் என்கிட்ட கேட்டதிற்கு நான் சொன்ன பதில் அவங்க முகத்தில பார்த்த சந்தோஷம் எனக்கு இன்னும் மனநிறைவை ஏற்படுத்தியது. விருது கிடைத்த பிறகு என் எழுத்து பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு இன்னும் அதிகமாக வாய்ப்பிருந்ததாகப் பார்க்கிறேன்.

2) நீங்க சமீபத்தில் மொழிபெயர்த்த நூல் எது மற்றும் உங்கள் சொந்த படைப்பு எப்போது வெளியாகும்?

நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை
நான் நன்றாக ‘என்ஜாய்’ பண்ணேன். அந்தக் காலம் முழுவதும் நிறைய வாசித்தேன். அதிலிருந்து நான் ‘உஷ்ண ராசி’ மலையாள நூல் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்

மலையாள எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கே.வி. மோகன்குமார், 2016 இல் எழுதி, இதுவரை 12 விருதுகளைப் பெற்றிருக்கிறது இந்த நாவல். கேரளாவில. கம்யூனிசம் தோன்றி வளர்ந்த வரலாறு, மக்கள் சக்தியுடன் இணைந்து போராடி முதலாவது கம்யூனிஸ்ட் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனப் போகும் கதை. இரண்டு ஆண்டுகள் செலவழித்து இந்த நூலை எழுதி முடித்தேன். இந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில இந்த நூலை வெளியிட்டோம்.

நான் இன்னமும் மொழிபெயர்ப்பாளராக இருந்து வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். மொழிபெயர்ப்பு என்பது சொந்தப் படைப்புக்கு சற்றும் சளைத்ததில்லை. சொந்த படைப்பு எழுத அதற்கான சூழல் ஏற்படுறப்ப கண்டிப்பா எழுதுவேன்.

3) நீங்க எழுதினப் புத்தகங்களைப் பரிசாக யாருக்கெல்லாம் கொடுத்திருங்கீங்க?

என் மாணவர்களுக்கு எனக்குமான நெருக்கம் அதிகம் என்பதால் நான் எழுதின நூல்களை அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பது வழக்கம். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசாகக் கொடுப்பேன்.

முக்கியமாக, என் மாணவர்கள் படிக்க விரும்பும் நூல்களை வாங்கி கொடுங்கன்னு என்கிட்ட அன்போடு கேட்பாங்க, இதேமாதிரி என் மாணவி ஒருவர், கவிஞன் நகுலன் எழுதிய கவிதை புத்தகம் வாங்கி கொடுக்கும்படி கேட்டிருந்தாங்க, பெரும்பாலும் வெகுஜனத்தால் அறிப்படாத மிக சிறப்பான கவிஞர் பெயரைச் சொல்லி, அவர் எழுதின நூலைக் கேட்டது என்னைச் சட்டுன்னு வியப்புல ஆழ்த்துச்சு. ஏதோ, அவங்களுக்கு நாமும் எதையோ விதைத்து விட்டிருக்கிறோம்னு நினைக்கிறப்ப ஒரு சின்ன சந்தோஷம்.

4) 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பை ஒரு ஆசிரியராக எப்படி பார்கிறீங்க?

அரசு பள்ளியில தமிழ் ஆசிரியராக 16 வருசத்துக்கும் மேல பணியாற்றி
வருகிறேன். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குப் போக
முடியாமப் போச்சு, ஊரடங்கு அறிவிப்பால வீட்டின் வறுமை காரணமாக கிராமப்புறத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் படிப்பைப் பாதியிலே
நிறுத்திட்டு, வேலை பார்க்கப் போய்டாங்க. இதனால மாணவர்களின் பள்ளி
இடைநிற்றல் சதவிகிதம் அதிகமாகியிருக்கு. என் மாணவர்களே சிலர்
இப்படி படிப்பைப் பாதியிலே நிறுத்தியது எனக்கு மனசுக்குக் கஷ்டத்தை
ஏற்படுத்துச்சு.

அதனால பள்ளிகளில் இந்தாண்டை zero year-ஆக அரசு அறிவிக்கணும். விட்டுப்போன இந்தாண்டுப் பாடத்தை மீண்டும் நடத்தணும். ஒரு ஆண்டு மாணவர்களுக்கு வீணாப்போச்சினா என்ன இப்போ? அரசு இப்படிச் செய்வதால், இந்த ஊரடங்கு காலத்தில் படிப்பை இழந்த பல மாணவர்களை பள்ளிக்குப் வரவழைத்து அவர்கள் இழந்த கல்வியை நாம் திரும்பக் கொடுக்க முடியும்னு நம்புறேன்.

5) தொடர்ந்து நீங்க எழுதி வருவதிற்கு உங்க குடும்பம் அளித்து வரும் ஆதரவு எப்படி இருக்கு?

ஒரு புத்தகத்தை எழுத ஆரம்பிச்சிட்டேன்னா எனக்குள்ள ஒரு ஃபையர் ஓடிக்கிட்டே இருக்கும். காலையில ஐந்து மணிக்கு எழுந்து, என் முதல் எழுத்தை எழுதியாகணும் எனக்கு! அதனால வீட்ல சமையல் மற்ற பணிகளை, பெண்கள் நிறைஞ்ச எங்க வீட்ல, நாங்க அழகாகப் பகிர்ந்து கொள்வோம். ‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை கிடைக்காமல் பெண் விடுதலை இல்லைனு’ கார்ல் மார்க்ஸ் சொல்லிருக்கிறார். 

அவர் வார்த்தைகளின்படி நான் மிகவும் சுதந்திரமாகவே இருக்கிறேன். இப்படி
அம்மாவாகவும், மனைவியாகவும் என்னைத் தாங்குகிற குடும்பமாக இவர்கள் இருப்பதால், என்னால எழுதுகிற பணியில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. என் கணவனும் மகளும் கூட புத்தகங்கள் எழுதியிருக்காங்க. என் மகன் தீவிர வாசகன். அதனால அவங்களால என்னை நல்லாப் புரிஞ்சிக்க முடியும்.

6) புதிய கல்விக் கொள்கை மற்றும் புதிய ஆசிரியர் ஓய்வூதிய திட்டம் பற்றி?

புதிய கல்விக் கொள்கையின் சாதகம், பாதகம் குறித்தும், இருமொழிக்கொள்கையின் அவசியம் குறித்தும் ஆலோசனை செய்ய தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் நானும் இடம் பெற்றிருக்கேன்.

ஓய்வூதியம் குறித்துச் சொல்லணும்னா, 25 வருடங்கள் அரசாங்கத்தை நடத்துவதற்குத் தம்மை ஒப்புக் கொடுத்த, ஓர் அரசு ஊழியரின் ஓய்வுக் காலத்திற்கான வாழ்வாதாரத்தை உறுதியளிக்க வேண்டிய பொறுப்பு அந்த அரசின் பொறுப்புதானே? பங்களிப்பு ஓய்வூதியம் என்ற பெயரில் கொடுத்தனுப்பப்படும் அந்தப் பணம் அவரின் இறுதிக்காலம் வரை போதுமானதா? அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

7) அரசியலில் எழுத்தாளர் பங்கு எப்படி இருக்கணும்னு நினைக்கீறிங்க?

இந்தியா முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் அரசியலை பொருத்தவரை,
கைகோர்த்துதான் பணியாற்றி வருகிறார்கள். அரசியல் சமூகம் கலாச்சாரம் ஆகியவற்றை இலக்கியம் கலை மூலம் எழுத்தாளர்கள் இத்தனை காலமும்
மக்களிடம் சரியாகவே கொண்டு சேர்த்துள்ளதாகவே நம்புகிறேன்.

நேர்காணல் : வெ. காயத்திரி

Advertisement:

Related posts

தமிழ்நாட்டில் 4,454 பேர் வேட்புமனுத் தாக்கல்!

Gayathri Venkatesan

விலையுயர்ந்த காரை காபி கடையாக மாற்றியுள்ள இளைஞர்..

Ezhilarasan

11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

Karthick