செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட நாசாவின் பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பிய குழுவின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி சுவாதி மோகன், சமீபத்தில் கமலா ஹாரிஸை அடுத்து பிறந்த இந்திய மண்ணுக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த வியாழக்கிழமை செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது. இதற்கு நாசா விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உள்பட உகலத் தலைவர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர்.
நாசாவின் ரோவர் விண்கலத்தை அனுப்பிய குழுவின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் இடம்பெற்றிருந்தது சிறப்பம்சமாகும். இவருக்கு இந்தியாவில் இருந்து பலர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுவாதி மோகன், தன்னுடைய ஒரு வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். வடக்கு வர்ஜினியா- வாஷிங்டன் பகுதியில் தனது முழு குழந்தைப் பருவத்தையும் கழித்தார்.
தனது ஒன்பது வயது முதலே அமெரிக்காவின் அறிவியல் தொடர் Star Trek-யை பார்த்து வியந்துபோன சுவாதி, அதன் காரணமாக அறிவியல் மேல் ஈர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். பள்ளி பருவத்தில் மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்று ஆசையிருந்த அவர், தனது இயற்பியல் ஆசிரியர் வழிகாட்டுதலால் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தார். இவ்வாறே அவர் கல்லியில் அறிவியல் குறித்தப் பயணம் இருந்துள்ளது.
இந்நிலையில் நாசாவில் பெர்சவரனஸ் ரோவர் திட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக சுவாதி மோகன் கடினமாக பணியாற்றி வந்துள்ளார். மேலும் சனிக்கோள் ஆராய்ச்சி தொடர்பான நாசாவின் கசினி திட்டத்திலும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.
தற்போது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கப்பட்ட ரோவர் விண்கலம் திட்டம் வாயிலாக நாசாவில் விஞ்ஞானி சுவாதி செய்து வரும் பணியானது உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியான நாசா விஞ்ஞானி சுவாதி மோகன் பிறந்த தாய் மண்ணுக்கும் நாட்டு மக்களுக்கும் பெருமைச் சேர்த்துள்ளார்.
Advertisement: