தமிழகம் முக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!

கொரோனா பரவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை சரியான கோணத்தில் புரிந்துகொண்டு செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக, தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் 2 லட்சம் பேர் கூடினால், அதை எப்படி தடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கடமை என கூறிய தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெறாத மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டது.

அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக கூறிய தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்கு தேர்தல் ஆணையத்தை குறைகூறுவதா என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களை சரியான கோணத்தில் புரிந்துகொண்டு செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உயர்நீதிமன்றத்தின் கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல என கூறிய நீதிபதிகள், நீதிபதிகளுக்கு உள்ள பணிச்சுமையை புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement:

Related posts

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

Gayathri Venkatesan

தினசரி உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இன்று 15 ஆயிரத்தை நெருங்கியது!

Ezhilarasan

மாசில்லாத கட்டுமானங்களை உருவாக்க முனையும் மாற்றுக்குழு!

Jeba