செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில்,அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

இதனையடுத்து, கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.அவர் இன்று மாலை ராமேஸ்வரப்பட்டி, மண்மங்களம், புதுப்பாளையம், குடுகுடுத்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார்.
அவருக்கு, கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், மாலை, பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும், உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்.
ஏற்கனவே, கரூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட எம்.ஆர் விஜயபாஸ்கர், கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தி.மு.க செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை சேகரிப்பதாக குற்றம்சாட்டினார்.
Advertisement: