முந்தைய திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் 5 மடங்கு கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் மொத்த கடன் 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், சட்டபேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், அதிமுக அரசு பெரும் நிதி பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
மேலும், கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன், வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே, ஆனால், தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும், 3.55 லட்சம் கோடி ரூபாய் என, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக வரலாற்றில் கடன் வாங்கி, கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு, அதிமுக அரசு என்றும், கடந்த 3 மாதங்களில் மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட டெண்டர்களை விட்டு, அரசு கஜானாவை காலி செய்துள்ளனர் என்றும், ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழத்தில் ஒவ்வொருவர் மீதும் 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனை, அதிமுக அரசு சுமத்திவிட்டு செல்கிறது. எனவே, அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த அதிமுக ஆட்சியின், கடைசி நிதிநிலை அறிக்கை உரையையும், கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிப்பதாகவும், மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.