தமிழகம் முக்கியச் செய்திகள்

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்திற்கு ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து!

பிரபல தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

20 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி இமையம் எழுதிய செல்லாத பணம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னதாக மத்திய, மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமயத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “தனது எழுத்துகளால் எளிய மக்களின் வாழ்வியலை அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்கப் படைப்பாளர் திரு. இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி! கொள்கை சார்ந்த பயணத்துடனான படைப்புகள் மென்மேலும் விருதுகள் பெற்றிட வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தடம்பதித்து வரும் எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ படைப்பிற்கு, “2020-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது” கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ எழுத்தாளர் இமையம் சாகித்ய அகாடமி விருது பெறுவது படைப்பாளியின் வெற்றி; வாழ்த்துகிறேன்! அவர் படைப்புகளில் மையப்படுத்தப்படும் வலிசூழ் விளிம்புநிலை மக்களின் எழுச்சியும் மீட்சியுமே படைப்பின் வெற்றி. அது நிகழ வேண்டுமென விரும்புகிறேன்” என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

இனி நம்பர் ப்ளேட் இப்படிதான் இருக்க வேண்டும்… மீறினால் ஆயிரக்கணக்கில் அபராதம்!

Saravana

ராமநாதபுரத்தில் தப்பியோடிய கைதி கைது; 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்!!

Jayapriya

தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!

Gayathri Venkatesan