இந்தியா முக்கியச் செய்திகள்

பத்ம விபூஷன் விருதுபெற்ற சோலி சொராப்ஜி கொரோனாவால் மரணம்: பிரதமர் இரங்கல்

பத்ம விபூஷன் விருது பெற்ற மூத்த வழக்கறிஞர், சோலி சொராப்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞர், சோலி சொராப்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் சட்டக்கல்வி பயின்றார். 1953ம் ஆண்டு இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். 1971ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் முக்கிய பொறுப்பு வகித்தார். இவர் இரண்டு முறை ( 1989, 1998 – 2004) அட்டர்னி ஜெனரலாக பொறுப்பு வகித்தார். மேலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பாக ஐநாவின் துணை ஆணையத்தில் அவர் முக்கிய பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இரங்கல் தெரிவித்தார். இன்று காலையில் நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பு அனைவரின் முன்னிலையில் நீதிபதி என் வி ரமணா பேசியதாவது, ‘ வருத்தமான செய்தி. நீதித்துறையின் சிறந்த முன்னோடி, மனித உரிமை போராளியான சோலி சொராப்ஜி காலமானார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று அவர் கூறினார்.

மேலும் இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியைப் பதிவிட்டுள்ளார். ’ நீதி மூலமாக வறியவர்களுக்கு உதவியவர். வாழ்நாள் முழுவதும் அவரது சாதனை பேசப்படும். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.’ சோலி சொராப்ஜி மறைவு சோகத்தை ஏற்படுத்துகிறது. அவர் நீதியின் ஒலியாகத் திகழ்ந்தவர். அவரோடு பணி செய்த நண்பர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

மு.க.ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து!

L.Renuga Devi

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குப்பதிவு! வாக்குப்பதிவு நிறுத்தம்!!

Karthick

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் ஜெர்மன் செயலி

Gayathri Venkatesan