தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்: சத்யபிரதா சாகு

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6, 28,69, 955 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

”தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6, 28,69, 955 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். இதில் 3,09,23,651 பேர் ஆண் வாக்காளர்கள். 3,19,39,112 பேர் பெண் வாக்காளர்கள். 7,192 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். தமிழகத்தில் வாக்களிக்க 88, 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 4,17,521 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1, 58, 263 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் வாக்காளர்கள் பூத்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள 1950 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். 1950 எண்ணுக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட எஸ்டிடி (Std) எண்ணை சேர்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்க சுமார் 88, 900 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 56,203 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இதில் 10, 813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதுபோல் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்படும். 1,59,165 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். மேலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.

வாகன சோதனையில் இதுவரை 428 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக மட்டும் 225 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தனிச் செயலி (PAWD portal) உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் உள்ளிட்ட தேவைகளை தனி செயலி மூலமாக கோரிக்கை விடுக்க முடியும். பார்வை மாற்றுத்திறனாலிகளுக்காக 3,538 பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுடையவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் கவச உடையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 80 வயதானவர்கள், ஊபர் செயலி மூலம் கோரிக்கை விடுத்தால், வாக்குச்சாவடிக்கு இலவசமாக வாக்களிக்க அழைத்துச்செல்லப்படுவர். பணப்பட்டுவாடா தொடர்பாக சீவிஜில் செயலி மூலம் கரூர், கோவை,கன்னியாகுமரி, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து அதிகப்படியான புகார்கள் வந்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்த 1,04,282 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் 1,03,202 விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த 28,531 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் 28,159 விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. அதுபோல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான தபால் வாக்குகளுக்கு 30 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படன அதில் 28 திரும்பபெறப்பட்டுள்ளன.’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

கொடைக்கானலில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழா : உடலில் சேற்றை பூசிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன்!

Saravana

தேர்வில் சினிமா பாடல் எழுதிய மாணவன்; ஆசிரியர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar

“வெற்றிபெறும் கூட்டணியில் முதன்முறையாக இணைந்துள்ளோம்”: திருமாவளவன்

Jeba