நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் சிறைக்கு சென்ற வி.கே சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். சிறைலிருந்து விடுதலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பலத்த வரவேற்புடன் சசிகலா சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த சில நாட்களில் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார்.
நாளை தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் அவர் வாக்களிக்க இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. வேதா இல்லம் நினைவில்லமாக ஆக்கப்பட்டதால் அங்கிருந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசியுடன் சேர்த்து 18 பேரின் பெயரும் வாக்களர் பட்டியலில் இடம் பெறவில்லை. சசிகலாவால் வாக்களிக்க முடியாவிட்டால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் அமமுக கோரிக்கை வைத்துள்ளது.
Advertisement: