பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வருகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். அவர் இன்று காலை 9 மணிக்கு சென்னை திரும்புவார் என தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில் தேவனஹள்ளி விடுதியில் இருந்து இன்று காலை 7.15 மணியளவில் சசிகலா தமிழகம் புறப்பட்டார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனாலும், அதிமுக கொடி பறக்கும் காரில் சாலை மார்கமாக சென்னை வருகிறார் சசிகலா. அவருக்கு அமமுகவினர் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தமிழக -கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஓசூர் பகுதியில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் குவிந்துள்ள நிலையில் அங்கு காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், பேனர் கிழிக்கப்பட்டதைத் தாண்டி அமைதி வழியில் சென்னை செல்கிறோம், சசிகலாவை உற்சாகமாக வரவேற்க அமமுக தொண்டர்கள் தயாராக உள்ளதாகக் கூறினார்.
Advertisement: