புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும், என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக, ஹெக்டேருக்கு 13,500 என்பது 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாய் என்பது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார். இதன் மூலம், சுமார் 5 லட்சம் விவசாயிகளுக்கு, 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படுவதாகவும், நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில், வரும் 7-ம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும், என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement: