ஆசிரியர் தேர்வு இந்தியா

சுற்றுச் சூழலை பாதுகாத்து வரும் இந்தியாவின் பசுமை மனிதர்

வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில் நாம் அனைவரும் தோல்வியை சந்தித்திருப்போம். அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு மீண்டு வெளி வருபவர்களே பின்னாளில் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். அதுபோல ஒருவரை பற்றித்தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்…

பஞ்சாப்பை சேர்ந்தவர் ரோகித் மெஹ்ரா. இவர் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியை தழுவி அதன்பின் விடா முயற்சியோடு போராடி 2004ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆனார். ரோகித் சிறுவனாக இருக்கும்போது அவரை செடி வளர்க்க அவரது தாத்தா ஊக்குவித்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் இவருக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஒரு நாள் ரோகித்தின் மகனுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதற்கு காரணமாக கூறப்பட்டது காற்று மாசுபாடு. அப்போது அவரது மனதில் தனது மகனுக்கு சுத்தமான காற்றை கொடுக்கமுடியவில்லை என சிறிய வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு காற்று மாசுபாட்டை குறைக்க ஐந்து வெவ்வேறு திட்டங்களைக் கையிலெடுத்தார். இதற்கு அவரது மனைவி கீதாஞ்சலி மற்றும் குழந்தைகளை இணைத்துக்கொண்டார். அவர்களின் உதவியோடு பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வெர்டிக்கல் கார்டன் அமைப்பது, குப்பை கொட்டப்படும் பகுதிகளில் பசுமை காடு அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு ‘இந்தியாவின் பசுமை மனிதர்’ என்கிற பெயரை இவர் வென்றுள்ளார்.

ரோகித் கையிலெடுத்த முதல் திட்டமான வெர்டிக்கல் கார்டன் – அழகு மற்றும் பாதுகாப்பு, காற்று, பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பாட்டில்களை செடி நட பயன்படுத்தினர். இதன்மூலம் நாட்டின் பல பகுதிகளில் 500 வெர்டிக்கல் கார்டன் அமைத்துள்ளதாக ரோகித் தெரிவித்துள்ளார். லூதியானாவின் ரிஷி நகரில் உள்ள வருமான வரித்துறை வளாகத்தில் இவர் அமைத்துள்ள வெர்டிக்கல் கார்டன் நாட்டின் மிகப்பெரிய கார்டன் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்தில் 17,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு பெறப்படும் பாட்டில்கள் பள்ளி மாணவர்கள், ஸ்கிராப் டீலர்கள் போன்றோரிடமும் மற்ற இடங்களிலிருந்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெறப்படுகின்றன. அம்ரிஸ்டர் தங்க கோவில், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள், சில ஐஐடி வளாகங்கள் போன்ற இடங்களிலும் வெர்டிக்கல் கார்டன் அமைத்துள்ளார். இவை அனைத்துமே மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டவை.

ரோகித் பஞ்சாப் மட்டுமல்லாது டெல்லி, குருகிராம், சூரத், வடோடரா, ஜம்மு, மும்பை, கொல்கத்தா, ஒடிசாவின் சில பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் கார்டன் அமைத்துள்ளார். இவர் சமீபத்தில் மரங்கள் மற்றும் செடிகளுக்கான மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இதில், செடிகளுக்கு ஏற்படும் நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்காகவும் அதற்கான தீர்வுகளுக்காகவும் தாவரவியலாளர், புவியியலாளர், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் என 25 தன்னார்வலர்களுடன் ரோகித் பணியாற்றுகிறார். முதல் மூன்று நாட்களிலேயே இக்குழுவிற்கு 325 அழைப்புகள் வந்துள்ளன. சுற்றுச் சூழலை பாதுகாக்க இவர் எடுத்து வரும் முயற்சிக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!

Nandhakumar

அடுத்த ஆண்டு அகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்புமருந்து; சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்!

Dhamotharan

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கான விருதுகள்!

Jayapriya