700 கோடி ரூபாய் மதிப்பிலான, ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி, காணொலி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் பங்கேற்றார். 700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயு குழாய் திட்டம், ராமநாதபுரத்தில் உள்ள ONGC எரிவாயு வயல்களில் இருந்து இயற்கை எரிவாயுவினை எடுத்து, தூத்துக்குடியில் உள்ள பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விதமாக செயல்படுத்தப்படுகிறது.
மேலும், சென்னை மணலியில் பெட்ரோல் கந்தகத்தை அகற்றும் பிரிவையும், பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரித்து வருவதாகவும், எரிபொருளுக்காக மற்ற நாடுகளை நாம் சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை, பிரதமர் மோடி தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த திட்டத்தால், அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா காலத்திலும் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டதாகவும், தொழில் துவங்க எளிய நடைமுறையால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Advertisement: