கொரோனா ஊரடங்கு காலத்தின்போதும், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு, சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ளார். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டமும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும் உள்நோக்கங்கள் கொண்ட போராட்டங்கள் அல்ல என்று அவர் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் பாமக வலியுறுத்தி வந்ததாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்பதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Advertisement: