இந்தியா முக்கியச் செய்திகள்

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது.


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குக் கூடியது. முன்னதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.


அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார். தற்போது நடப்பது எதிர்க்கட்சிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு வேலை என்ற அவர், புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக இரவு, பகலாக பாடுபட்டோம், மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.


இலவச அரிசிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அதற்கு பதிலாக 5 ஆண்டுகளும் பணமாக வழங்கினோம். 5 ஆண்டுகள் போராடியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முன்வரவில்லை, புதுச்சேரி வளர்ச்சியைக் குறைக்க திட்டமிட்டு நிதியைக் குறைத்தது மத்திய அரசு, 4 ஆண்டுகளாக புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி தரப்படவில்லை என்றெல்லாம் மத்திய அரசின் மீது நாராயணசாமி விமர்சனங்களை முன்வைத்தார்.


எதற்கெடுத்தால் சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவுகிறது மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே வரியின் கீழ் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றது, மத்திய அரசால் புதுச்சேரிக்கு 20 சதவிகித நிதி மட்டுமே வழங்கப்படுகிறது, புதுச்சேரி மக்கள் என்ன இரண்டாம் தர குடிமக்களா? மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. அண்டை மாநிலங்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் போது புதுச்சேரிக்கு மட்டும் தடை ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

பேசிமுடித்த பிறகு நம்பிக்கை வாக்கு கோராமல் அவையிலிருந்து முதல்வர் நாராயணசாமி வெளியேறினார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர். இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததாகக் கூறிய சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார். இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்தது.

Advertisement:

Related posts

உர விலை 58 சதவிகிதம் உயர்வு; திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Gayathri Venkatesan

ஜம்மு – காஷ்மீர் இல்லாமல் இந்திய வரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததால் சர்ச்சை!

Jeba

விவசாயிக்கும் – வியாபாரிக்கும் இடையே நடக்கும் தேர்தல்: அன்புமணி ராமதாஸ்

Karthick