தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களை நோக்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தொண்டர்களின் உழைப்பால் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அரசியல் விலாசம் கிடைத்ததாகவும், திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனை, டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார்.
தேனி மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் தந்த ஒரே தலைவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் என புகழாரம் சூட்டிய முதல்வர், 100 நாட்களில் பொதுமக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
திமுகவினர் பொய் சொல்லி மக்களை சந்திக்கிறார்கள் எனவும், ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது, ஸ்டாலின் பெட்டியைத் திறக்க போவது இல்லை. மனுக்களை படிக்கப் போவதுமில்லை. ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை என்று விமர்சித்தார். சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்து வரும் ஒரே அரசு அதிமுக அரசுதான் எனவும், திமுக தேர்தல் நேரங்களில் அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறது என்றும், தமிழகத்தில் சாதி-மத சண்டைகள் கிடையாது எனவும் குறிப்பிட்ட முதல்வர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
Advertisement: