செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகத் தேர்தலில் அரசியல் வாரிசுகள் யார்? யார்?

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சில அரசியல் வாரிசுகளும் போட்டி யிட்டிருக்கிறார்கள்.

இந்தியா ஜனநாயக நாடு என்றாலும், தேர்தல் அரசியலில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பங்கெடுப்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.

இந்த வாரிசு அரசியலுக்கு மற்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், இதற்கு முன்பு ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை யும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதேபோன்று இப்போது மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மகன் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமியும், பழனி தொகுதியில் இருந்து அவர் மகன் ஐ.பி செந்தில்குமாரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் பெ.சு.தி.சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பெ.சு.திருவேங்கடத்தின் மகன். திருச்சுழி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகன்.

இதேபோல், கடையநல்லூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் கிருஷ்ண முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீதா ஜீவன், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகள்.

ஆலங்குளம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டபேரவை தலைவர் பி.எச்.பாண்டியனின் மகன். ராமநாதபுரம் தொகுதியில் வென்றுள்ள திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராம லிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்சா வெள்ளைச் சாமியின் மகன். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக கோலோச்சிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி திருநாவுக்கரசரின் மகனுமான எஸ்.டி.ராமச் சந்திரன், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

திருவாடனை தொகுதியில் இருந்து கருமாணிக்கம், காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை கே.ஆர்.ராமசாமியும், தாத்தா கரியமாணிக்கமும் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கின்றனர். முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவராகவும் இருந்த பிடி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனான, தியாகராஜன் 2வது முறையாக மதுரை மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொருளாளரும், மூத்த தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடி தொகுதியில் இருந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வெற்றியழகன், திமுக பொதுச்செயலாளராகவும் பல ஆண்டுகள் பதவி வகித்த மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் பேரன்.

அதே போல் திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகனுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சிவசங்கர், திமுகவில் எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளை வகித்த சிவசுப்பிரமணியத்தின் மகன்.

வாரிசு உரிமைக்கு இது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி என பொத்தாம் பொதுவாக விமர்சனங்கள் இருந்தாலும், தேர்தல் அரசியலில் வாரிசுகள் வலம் வருவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

செய்தி தொகுப்பு: ராணி கார்த்திக்குடன் தங்கபாண்டியன்

Advertisement:

Related posts

“தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்”: எல்.முருகன்

Karthick

மிரட்டும் கொரோனா: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Karthick

பாஜக சட்டமன்றக் குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு!

Karthick