தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தலைவர்கள் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 7-ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, 150 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்க உள்ளது.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனிடையே, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டாலினின் கவனம் முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதில்தான் உள்ளதாக தெரிவித்தார். மதிமுக 4 இடங்களில் பெற்ற வெற்றி, திமுகவால் கிடைத்த வெற்றி என்றும் வைகோ கூறினார்.

இதேபோல், ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் மக்கள் பாடம் புகட்டிவிட்டதாக தெரிவித்தார். கருணாநிதியைப் போல ராஜதந்திரத்தில் வல்லவர் என்பதை ஸ்டாலின் உறுதி செய்துள்ளதாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை வழங்குவார் என்றும் திருமாவளவன் கூறினார்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயம் வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு ஸ்டாலினின் வெற்றியை தடுக்கவில்லை என்று தெரிவித்தார். பாஜகவின் உறுப்பினர்களால் மாற்றங்கள் வரப்போவதில்லை என்றும் வேல்முருகன் குறிப்பிட்டார்.

இதேபோல், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

’எனக்கு நீயும் உனக்கு நானும்’: பாகனைச் செல்லமாகக் கட்டியணைக்கும் குட்டி யானை

Karthick

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

Ezhilarasan

திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்த மனைவி-காதலனுடன் கைது!

Gayathri Venkatesan