அதிமுக அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி பரப்புரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நிறைவேற்றிய சாதனை திட்டங்களை அப்போது ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டார். 2023ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்ததை குறிப்பிட்டுபேசிய ஓ.பன்னீர்செல்வம், அதன்படி 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழை-எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தான் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறிய துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம், ஆனால் அதிமுக ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சத்தி 85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, புதிதாக 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கை செல்லாத கள்ள நோட்டு என்றும் அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Advertisement: