கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து வடகொரியா விலகுவதாக அறிவித்துள்ளது.
வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் கடந்த மார்ச் 25-ம் தேதி தேசிய ஒலிம்பிக் விளையாட்டு ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக வடகொரியா இன்று அறிவித்துள்ளது.
தன்னுடைய நாட்டு வீரர்களின் உடல்நலன் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது, 3-வது அலை காரணமாக மீண்டும் பல நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வடகொரியா ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகும் முதல் நாடாக வடகொரியா உள்ளது. 1988-ம் ஆண்டிலிருந்து முதல் முறையாக வடகொரியா கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றில் முதன்முறையாக தென்கொரியாவுடன் இனைந்து வடகொரிய ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டது. இப்போட்டியில் வடகொரிய தடகள வீரர்கள் 22 பேர், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 230 பேர் வடகொரியா சார்பில் கலந்துகொண்டனர். வடகொரியாவின் இந்த நடவடிக்கை தென்கொரியாவுடனான முன்னேற்றமாக உலக நாடுகள் பார்த்தன. இப்போட்டியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தங்கை கிம் யோ ஜாங் தலைமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: