மத்திய பிரதேச போலீஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளைக்காரர்கள் பற்றிய கதைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய பிரதேசத்திலுள்ள பிந்த் பகுதியில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கொள்ளைக்காரர்கள் பற்றிய பிரத்யேகமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நிர்பாய் குஜ்ஜார், பூலான் தேவி உள்ளிட்ட பிரபலமான கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
கொள்ளைக்காரர்களை புகழ்வதற்காகவோ அல்லது மரியாதை அளிப்பதற்காக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவில்லை என்ற அப்பகுதி எஸ்.பி மனோஜ்குமார், அவர்கள் செய்த குற்றங்களை வெளிக்காட்டுவதும், கொள்ளையைத் தடுக்க போராடிய காவல் துறையினரின் தியாகங்களை போற்றுவதும்தான் முதன்மை நோக்கம் என்றார்.
கடந்த 50 வருடங்களில் கொள்ளைக்காரர்கள் ஈடுபட்ட கொலை, கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் குறித்த 2,000 கணிணி மயமாக்கப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் இங்கு உள்ளன. சம்பல் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் நாட்டிலேயே மிக மோசமான கொள்ளை சம்பவங்களுக்கு பெயர் போனவர்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அருங்காட்சியகம் 4 அறைகளைக் கொண்டுள்ளதாகவும், கொள்ளையர்களோடு சண்டையிட்டு மரணித்த 28 காவலர்களின் புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இந்த பகுதியில் கொள்ளைக்காரர்கள் செய்த குற்றங்கள் சமூகத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படங்கள் கொள்ளைக்காரர்களை ராபின் ஹூட் போல சித்தரித்தன. இதுபோன்ற எண்ணங்களை இளைஞர்கள் மத்தியில் மாற்ற வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
அருங்காட்சியகத்தில் உள்ள 4 தொலைக்காட்சிகளில் கொள்ளைக்காரர்கள் எப்படி கொள்ளையடிப்பார்கள் என்பது குறித்தும், அதுதொடர்பான சாட்சியங்களும் திரையிடப்படுகிறது.
Advertisement: