செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

என்னை கொலை செய்ய முயற்சி: அமமுகவினர் மீது கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு!

தேர்தல் தோல்விக்குப் பயந்து தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, “நேற்றிரவு அதிமுக, அமமுக என இருதரப்பும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது காவல் துறை கேட்டுக் கொண்டதால் நான் என்னுடைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, என்னுடன் வந்த வாகனங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு, சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனியாக காரில் சென்றேன்.

அமமுகவினர் என்னுடைய காரை வழிமறித்தனர், அதையெல்லாம் கடந்து நான் வந்தேன். ஆனால், அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை அமமுகவினர் என் கார் மீது வீசி எறிந்தனர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது. என்னுடைய கார் டிரைவர், எனக்கு தீப்பொறி மேலே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

அந்த நேரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொறுமையாக கடைப்பிடித்து வந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், “என்னுடைய கார் டிரைவர் லாவகமாக காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். தேர்தல் பணிக்கு வரும் போதே இப்படி அராஜகம் செய்யும் நிலையில் வெற்றிபெற்றால் என்ன செய்வார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். என்னுடைய தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

தன்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தோல்வியின் பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அமமுகவினர் இறங்கியுள்ளனர், எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

Advertisement:

Related posts

அசாமில் 90 வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 171 பேர் வாக்குப்பதிவு!

L.Renuga Devi

வாட்ஸ் அப்பில் வீடியோக்களை மியூட் செய்யும் வசதி: சோதனையில் புதிய அப்டேட்!

Jayapriya

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் திடீர் உயர்வு!

Jeba