சினிமா முக்கியச் செய்திகள்

மனதில் நின்ற ஏமராஜா கதாபாத்திரம்!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஏமராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மலையாள இயக்குநரும், நடிகருமான லால் -ஐ ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

மலையாள திரையுலகத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லால். 1986ம் ஆண்டு ‘பாப்பன் பிரியப்பட்ட பாப்பன்’ என்ற திரைப்படம் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ள இவர் எதார்த்தம் மற்றும் கமெர்ஷியல் சினிமாக்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். மேலும் ஆகச்சிறந்த நடிகரும் கூட, ஆரம்ப காலத்தில் சினிமாவிற்கு வரும் பலர் தேடி வரும் துறையை தவிர்த்து மற்ற துறையில் சிறந்து விளங்குவது புதிதல்ல. நடிகர் கார்த்தி, முதலில் இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்தான், ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட்டானதால் ஹீரோவாக மாறிவிட்டார். அதுபோல இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இசை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார். நடிகர் தனுஷ் பன்முகத்தன்மை கொண்டவர், அவர் திரைப்படம் இயக்குவது, பாடல் எழுதுவது போன்று பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இசையமைப்பாளரக இருந்த விஜய் ஆண்டனி, ஜீவி பிரகாஷ் போன்றவர்கள் இப்போது முழு நேர நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். இதுபோல இயகுநர்களாக இருந்த சமுத்திரக்கனி, சசிகுமார், மிஷ்கின், ராம் ஆகியோர் தங்களை சிறந்த நடிகர்களாகவும் நிரூபித்துள்ளனர்.

இதற்கெல்லாம் முன்னோடி லால் என்றே குறிப்பிடலாம். தமிழில் 2004 ஆம் ஆண்டு ’எங்கள் அண்ணா’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்காந்துக்கு அண்ணனாக நடித்திருப்பார். மேலும் இவர் சண்டக்கோழி, தீபாவளி, தோரணை, பிஸ்தா, குட்டி புலி, சீம ராஜா, சகோ, சுல்தான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் அத்தனை தமிழ் படங்கள் நடித்திருந்தாலும், இவரது நடிப்பு தீணிபோடும் அளவுக்கு சிறந்த திரைப்படங்கள் அமையவில்லை. என்றே கூறலாம். சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த கதாநாயகர்கள், நாயகியை தாண்டி சில கதாபாத்திரங்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்திருப்பார்கள். அந்த வகையில் தான் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் லாலின் ஏமராஜா எனும் கதாபாத்திரத்தை கூறலாம்.

ஏமராஜா கதாபாத்திரத்தில் தன்னை மிக எதார்த்தமாக, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். இத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் ஊர் மக்கள் அனைவரும் கூடி இருப்பார்கள், அப்போது ஒரு திண்ணையில் நடிகர் லால், தனுஷும் அமர்ந்திருப்பார். லால் அமர்ந்து இருக்கும் தோரணையை பார்த்தாலே, அவர் நமது ஊரில், நாம் பார்த்த மனிதர்களின் பிம்பங்களாக இருப்பார். படத்தில் அவரது சமூகத்து மக்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படும்போது, என்ன செய்வதென்று தெரியாமல் அவஸ்தைப்படுவதுபோல முகபாவங்களை தத்ரூபமாக வெளிக்காட்டியிருப்பார்.

தனுஷுக்கு பணம் கொடுக்க, மூதாட்டியிடம் தானாகவே போய் பேசுவார். அந்த மூதாட்டி இவரின் நோக்கத்தை கண்டுபிடித்ததும், வெட்கப்பட்டு சிரிப்பார். அப்படி ஒரு வெள்ளந்தியான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார் என்றே சொல்லலாம். நடிகர் தனுஷிடம் கபடி விளையாட வரவில்லை என்றால் பேசமாட்டேன் என்று கோபத்தில் கூறும் காட்சியாக இருக்கட்டும், மூதாட்டிக்கு நெத்தியில் முத்தம் கொடுக்கும் காட்சியாக இருக்கட்டும், தனுஷின் அக்கா வந்து தனுஷை எந்த காரணத்திற்காகவும் காட்டிகொடுக்காதீர்கள் என்று கூறும்போது ஒரு வித பதற்றத்தில் அவர் பேசும் காட்சியாக இருக்கட்டும் லாலின் எதார்த்த நடிப்பு கதைக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கும்.

கேரளாவைப் போல ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்தவர், தென் மாவட்டத்தின் நிலப்பரப்பை புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது நிறைய நடைமுறை சிக்கல் ஏற்படும். ஆனால் இயக்குநர் லாலின் அனுபவம் அவருக்கு சினிமா மீதான காதல் அந்த படத்தில் ஏமராஜா கதாபாத்திரத்தில் மனிதன் வாழ்ந்திருப்பார். இவரே, டப்பிங்கும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. நெல்லை வட்டார வழக்கு சில சிரமங்கள் இருந்தாலும் அசத்தலாக பேசியிருப்பார். மஞ்சனத்தி பாடலில் இவரது நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது என்றே கூறலாம். தேனிசை தென்றல் தேவா குரலில், காலராவில் தனது மனைவி இறந்துவிட்டதாக அவர் உடைந்து அழும் காட்சி நம் மனதை உடைத்துவிடுகிறது.

கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் பாராட்டப்பட்டாலும், நடிகர் லாலின் நடிப்பை தற்போது அனைவரும் கவனிக்கத்தொடங்கி உள்ளனர். நெட்டீசன்கள் இவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

2020ம் ஆண்டில் பிரபலங்கள் மத்தியில் ட்ரெண்டான ஃபேஷன் ஆடைகள்!

Jayapriya

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!

Gayathri Venkatesan

“இது ஓய்வுக்கான நேரமில்லை” இணையத்தில் வைரலாகும் விராட் கோலி வீடியோ!

Karthick