வாக்குப் பதிவு முடிந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று 72.78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்.
அதன்பிறகு உடனடியாக விமானம் மூலம் கோவைக்குச் சென்று தான் போட்டியிடும் தெற்கு தொகுதி வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டார்.
தேர்தல் முடிந்த அடுத்த நாளே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுடன் இணையும் படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கிவிட்டார்.
தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா அதி வேகமாகப் பரவி வரும் நிலையிலும் 72 சதவிகித மக்கள் தங்கள் கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பணியில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றித் தெரிவித்துள்ளார்.
மேலும், “தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்தத் தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்றுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
Advertisement: