இந்தியா முக்கியச் செய்திகள்

24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!

விக்னேஷ்.எஸ்.எம்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் தலைநகர் டெல்லியில் மக்களை கொரோனா சூறையாடி வருகிறது என்றே சொல்லலாம்.

டெல்லியின் பரிதாப நிலை:

டெல்லியில் கடந்த ஒரே நாளில் 22,933 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாததால், சில நோயாளிகள் மருத்துவமனையின் வெளியே படுத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால் அங்கே தினமும் நூற்றுக் கணக்கில் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.இப்படி தினசரி அங்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், உடல்களை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் பரிதாப நிலை உருவாகியுள்ளது. இதைவிட வேதனை உயிரிழந்தவர்களை எரியூட்ட நடக்கும் அவலம்தான்.

மயானத்தில் நிகழும் அவலங்கள்:

சடலங்களை மயானத்திற்குக் கொண்டு சென்றாலும், அங்கே சடலங்களை எரிக்க வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தினசரி கொரோனவால் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், மயானங்களில் சடலங்களைத் தகனம் செய்யக்கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்ட சடலங்கள் மயானத்திற்கு வருவதால் எரி மேடை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரமும் மயானத்திற்குச் சடலங்களைக் கொண்டு வருவதால் அங்கே டோக்கன் முறை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மயானங்கள் இடைவிடாது இரவும், பகலும் எரிந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு 800 சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்ற எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தியுள்ளனர். மேலும் சடலங்களை எரிக்கப் பயன்படும் விறகு கட்டை கிடைப்பதில் கூட தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதை விட உச்சக் கட்ட நிலை என்ன தெரியுமா? 20,000 முதல் 25,000 ரூபாய் வரை செலுத்தினால் மட்டுமே சடலங்கள் எரிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

பணம் இருப்பவர்கள் சடலங்களை எரித்துவிடுகின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். இன்னும் சில மயானத்தில் அதிக ஆட்கள் சடலங்களைக் கொண்டு வருவதால் கொரோனா பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது.

இதனால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற உறவினர்களிடமிருந்து மொத்தமா சடலங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்து எரிக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. காய்கறிகளைப் பேரம் பேசி வாங்குவது போலச் சடலங்களைப் பேரம் பேசி வாங்கிக் கொண்டு எரிக்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

பூங்காக்கள் அவசர கால மயானங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். நாய்களை புதைக்கும் மயனாங்களில் கூட தற்போது சடலங்களை எரிக்கும் ஏற்பாட்டில் இறங்கியுள்ளது மாநகராட்சி . எனினும் சாலையில் நீண்டிருக்கின்றன எரியூட்டுவதற்கான சடலங்கள் , தன் உறவுகளை இழந்த அதிர்ச்சியை விட டெல்லி மக்களுக்கு அவர்கள் உடலை எரியூட்டுவதில் உள்ள சிரமங்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரம் இப்படி தொடர்ந்து எரிந்துக்கொண்டிருப்பது காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

Advertisement:

Related posts

கர்நாடகாவில் தீவிரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Niruban Chakkaaravarthi

சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

Jeba

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு!

Gayathri Venkatesan