கட்டுரைகள் முக்கியச் செய்திகள் வாகனம்

கார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு?


கல்கி கவியரசு

கட்டுரையாளர்

வாகனத்தின் உயிர் நாடி இன்ஜின் என்றால் அதன் மூளை பிரேக் ஆகும். ஒரு வாகன பயணத்தில் எத்தகைய தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து இருந்தாலும், அதில் மிக முக்கியப் பங்காற்றக் கூடியது இந்த பிரேக் தான். வாகனத்தை நினைத்த நேரத்தில் எப்படி இயக்கத் துவங்குகிறோமோ அதைப் போன்றே நாம் நினைத்த இடத்தில் நிறுத்துவதற்கு பிரேக் என்பதுஇன்றியமையாததாக இருக்கிறது. சிக்னல்களாக இருக்கட்டும் விபத்து நடைபெறும் இடங்களாக இருக்கட்டும் அங்கே ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு நிற்கும் வாகனங்களை பார்த்திருப்போம். அங்கே பெரும்பாலும் சொல்லப்படும் ஒரே காரணம் பேக் ஃபெயிலியர் அல்லது வண்டிக்கு பிரேக் பிடிக்கவில்லை என்பது தான்.


ஏன் இது போன்ற காரணத்தை பலரும் முன்வைக்கிறார்கள். வாகனம் என்றாலே இயல்பாகவே பிரேக் என்பது சரிவர இயங்க வேண்டுமே! ஏன் இது வாகனத்தின் கோளாறா ? இல்லை வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த மனித மூளையின் கோளாறா என்பதைப் பார்ப்போம். நீங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எந்த மாடலாகவும், எந்த நிறுவனத்தை சேர்ந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு வாகனத்தை பராமரிக்க வேண்டியது என்பது அந்த வாகன உரிமையாளரின் மிக முக்கியபொறுப்பு.நாம் எப்படி நமது அன்றாட வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மையும் நமது உடல் ஆரோக்கியத்தையும் சரிவர கவனித்துக் கொள்கிறோமோ ? அதைப்போன்றே நாம் வைத்திருக்கும் வாகனங்களின் இயக்கத்தையும், பராமரிப்புகளிலும் நாம் பெரிதும் கண்ணோட்டம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிகப்படியான நேரங்களை உங்கள் பயணத்தில் செலவிடுபவர்களாக இருந்தால் நீங்கள் கட்டாயம் உங்கள் வாகன பராமரிப்பில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட நேரங்களை வாகனங்களுடன் செலவிட்டு அவற்றை சிறந்த பராமரிப்புடன் வைத்துக் கொள்ளும் பொழுது வாகனங்கள் உங்களுக்கு தண்டச் செலவுகளை ஏற்படுத்தாது. மேலும் சிறு விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நீங்கள் பாதுகாப்புடன் இருக்கலாம். நாளடைவில் நீங்கள் சொல்லும் பேச்சைக் கேட்கும் செல்லங்களாகவே உங்கள் வாகனங்களும் மாறிப் போய்விடும். இதையெல்லாம் வாகனங்களை வாங்கும் பொழுதே விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் டீலர்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கலாம்‌. அவற்றில் நீங்கள் மறந்து போன சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த இருக்கிறோம். எப்படிப்பட்ட கார் ஓட்டுனர்களாக இருந்தாலும் நமது இந்தியச் சாலைகளில் ஆட்டம் கண்டு விடுவார்கள். இங்கே சாலைகள் சற்று வித்தியாசமானவை தான். இங்கே ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றதை வைத்து மட்டும் வாகனத்தை இயக்க முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஆனால் சர்வதேச சாலைகள் இவற்றிலிருந்து மாறுபட்டவை. ஆனால் என்ன செய்ய சர்வதேச சாலைகளில் பயணிக்கும் வாய்ப்பு நம்மில் பலருக்கும் இல்லாமலே போயிருக்கலாம்.

இந்திய சாலைகள் இவற்றிலிருந்து வேறுபட்டதும், விமர்சனத்திற்குள்ளாவதுமாய்
வேடிக்கையாக நடந்த வண்ணம் தான் இருக்கிறது. பள்ளம், மேடு என்று குண்டும் குழியுமான சாலைகள், மலையில் அடித்துச் செல்லப்பட்ட தார்சாலைகள், அதிகப்படியான ஸ்பீட் பிரேக்கர்கள் என்று இங்கே எப்படிப்பட்ட வாகன ஓட்டுநர்களையும் இந்தச் சாலை திணறடித்து விடும். இங்கே வாகனம் ஓட்டுவதற்கு ஆக்சிலேட்டர் மட்டும் பிடித்தால் பத்தாது அதற்குச் சரிக்குச் சமமாக பிரேக்கை இயக்க வேண்டிய கட்டாயமும் இந்திய சாலைகளுக்கு உள்ளது. அப்படியாக நீங்கள் அதிகப்படியாக பிரேக்கை மிதித்தாலும் கூட பிரேக் பேடின் ஆயுள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் பிரேக் பிடிக்காமல் எப்படி சாலையில் பயணிக்க முடியும் என்று கேட்கிறீர்களா? அதி வேகத்தில் பயணிக்கும் கார் ஒன்றில் சற்றென்று பிரேக்கை மிதிக்கும் பொழுது கார் வீலுடன் இணைந்து இருக்கும் டிஸ்க் பேட்
வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த காரின் பிரேக் பேட்- யை இழுத்துப் பிடித்து சட்டென்று காரை நிறுத்துவதற்கு வேகமாக இயங்கும். அப்பொழுது ஏற்படும் வெப்பத்தின் காரணமாகவும், அதிக உராய்வின் காரணமாகவும் பிரேக்பேட் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உயர்தர வாகனங்களுக்கான பிரேக்பேட் மாற்றுவதற்கான காலம் 20 ஆயிரம் கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் மாருதி, ஃபோக்ஸ்வேகன், டாடா , ஹூண்டாய் போன்ற கார்களுக்கு பிரேக்பேட் மாற்றுவதற்கான காலம் 50,000 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும். எதற்காக அத்தகைய கார்களில் 20,000 கிலோ மீட்டர்களில் பிரேக்பேட் மாற்ற வேண்டும் என்று கேட்டால் இந்த வகைக் கார்கள் சாலையில் பயணிக்கும் வேகமானது 120 இல் இருந்து 180 வரையிலும்அதிகப்படியாக 220 வரையிலும் பயணம் செய்வார்கள். இவர்களது வாகனத்தின் பவர், மற்றும் வேகத்தைப் பொறுத்து அதன் பிரேக் வேலை செய்யும்.

ஆகையால் உங்களது நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட கிலோ மீட்டர்களில் வாகனத்தின் பிரேக்பேட்களை மாற்றம் செய்து விட வேண்டும். ஆனால் மாருதி ஹுண்டாய் போன்ற வாகனங்களில் நாம் சராசரியாக பயணிக்கும் வேகமானது 60 முதல் அதிகப்படியாக 120 ஆகும். ஆகையால் அத்தகைய வாகனங்களோடு ஒப்பிடும் பொழுது உராய்வு ஏற்படுவது சற்று குறைவு தான். எனவே இந்த வகைக் கார்களுக்கு கால அவகாசம் கொஞ்சம் நீட்டிக்கப்பட்டு இருக்கும். அதைப் போன்றே இந்த பிரேக் பேடுகளின் விலையும் கார்களைப் பொருத்து மாறுபடும். ஹூண்டாய் , மாருதி துவங்கி நடுநிலையான வாகனங்களில் பிரேக்பேட்கள் 3000 துவங்கி 20,000வரையிலும் கிடைக்கும். ஆனால் ஆடி, பென்ஸ் , பிஎம்டபிள்யூ போன்ற சர்வதேச மாடல் கார்களுக்கு பிரேக்பேட்களின் விலை 50,000 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். வாகனங்களை இயக்கும் வேகத்தைப் பொருத்து ப்ரேக்பேடுகளின் தேய்மானமும் இருக்கும்.

ஒவ்வொரு முறை வாகனங்கள் சர்வீஸ் சென்டர்கள் சென்று வரும் பொழுதும் மிக கவனமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.குறிப்பிட்ட சில பாகங்களை கட்டாயம் மாற்ற வேண்டும் என்று சர்வீஸ் சென்டரில் குறிப்பிட்டு இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றிவிடுங்கள். மேலும் இந்த பிரேக் பேட் இன்னும் 1000 கிலோ மீட்டர் ஓடும் என்று உங்களுக்கு சர்வீஸ் சென்டர்கள் சமிக்ஞை தரும் பொழுதே நீங்கள் அவற்றை மாற்றி விடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் பிரேக் பேட் விஷயத்தில் காலதாமதத்தை நீங்கள் ஏற்படுத்தாமல் முன்கூட்டியே மாற்றம் செய்வது மிகவும் நல்லது. ஒவ்வொரு வாகனங்களையும் இயக்கும் ஓட்டுநரின் கையில்தான் உடன் பயணிப்பவர்களின் பாதுகாப்பு இருக்கிறது. ஆகையால் இத்தகைய விஷயங்களில் பெரிதும் அக்கறை செலுத்துங்கள். நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் தான் பின்னாளில் நம்மை கடுமையாக பாதிக்கும்.


வாகனங்களுக்கு வாய்விட்டு பேசத் தெரியாது. ஆனால், அவை அவ்வப்போது மனம் விட்டு அழத் துவங்கும் அதன் வெளிப்பாடு தான் அவ்வப்போது உங்கள் வாகனத்தில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகள் அவற்றைப் புரிந்து கொண்டு நீங்கள் உடனடியாக அவற்றை சரிப்படுத்திவிட்டால் உங்கள் வாகனத்தை விடவும் உங்களுக்கு மிக நெருங்கிய நண்பன் யாரும் இல்லை. பயணம் என்பது இனிமையானதும், வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளைப் பரிமாறிக் கொள்வதுமாகவுமே இப்பொழுது வரை இருந்து வருகிறது. ஆகையால் உங்களின் ஒவ்வொரு பயணங்களிலும் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டால் உங்கள் பயணம் என்றுமே பாதுகாப்பானதாக இருக்கும்.

போலாம் ரைட்….. என்று நீங்கள் புறப்படத் தயாராகி விட்டது எங்களுக்கு நன்றாகவே புரிகிறது…. உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்.

Advertisement:

Related posts

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

Jayapriya

பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Saravana

ஆன்லைன் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Niruban Chakkaaravarthi

Leave a Comment