இந்தியா உலகம் முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

மிச்செலின் ஸ்டார் விருதை வென்ற முதல் இந்தியப் பெண்மணி!

சர்வதேச அளவில் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிச்செலின் ஸ்டார் விருதினை இந்தியாவிலிருந்து பெண் ஒருவர் முதன் முதலாக பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிப்பிற்கும், எழுத்துக்கும் இன்னும் இதர துறைகளுக்கும் ஆஸ்கர், நோபல் என விருதுகள் உள்ளது போல சமையல் கலைக்கு வழங்கப்படும் ஒரு அங்கீகாரமாக மிச்செலின் நிறுவனத்தின் மிச்செலின் ஸ்டார் விருது கருதப்படுகிறது.

பிரெஞ்சு நாட்டின் டயர் நிறுவனமான மிச்செலின், சிறந்த சமையல் கலைஞர்களையும், அவர் சார்ந்த நிறுவனத்தையும் பெருமைப்படுத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் அடையாளப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ‘மிச்செலின் ஸ்டார்’ எனும் விருதினை வழங்கி வருகிறது.

தற்போது இந்த விருது பெறும் முதல் இந்திய பெண்மணியாக ‘கரிமா அரோரா’ உள்ளார்.

கரிமா, சமையல் கலையின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு முன்னர் ஊடக துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆனால், சமையல் கலையின் மீது ஏற்பட்ட காதல் அவரை “லு கார்டன் ப்ளூ” எனும் பாரிஸின் பிரபல சமையல் பள்ளிக்கு அழைத்துச் சென்றது. இங்கு சமையல் குறித்த நுணுக்கங்களை கற்றறிந்து 2010ல் பட்டப்படிப்பை முடித்தார்.

இதனைத் தொடர்ந்து டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் சர்தேச அளவில் பிரபலமான “நோமா” உணவகத்தில் டேனிஷ் சமையல் கலைஞரான ‘ரெனே ரெட்ஜெபியிடம்’ பயிற்சியில் ஈடுபட்டு பல உணவு வகை தயாரிப்புகளை பயின்றார். இந்த நோமா உணவகம் இரண்டு மிச்செலினின் ஸ்டார் விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு ஆண்டுகள் படித்த கலைகளை செய்முறையாக்கி பயின்ற பின்னர் 2016ல் ஆசியா திரும்பிய கரிமா, இந்தோனேசியா தலைநகரான பாங்காங்கில் உள்ள ஆசியாவின் புகழ் பெற்ற “காக்கன்” உணவகத்தில் இணை செஃப்பாக (chef) பணியைத் தொடங்கினார். இந்த உணவகம் ஆசியாவின் தலைசிறந்த உணவகங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இவ்வளவு உழைப்புக்கு பின்னர் இந்தியாவிலிருந்து மிச்செலின் ஸ்டார் விருதினை முதல் பெண்ணாக கரிமா பெற்றுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு முன்னர் “கா” (Gaa) எனும் புதிய உணவகத்தை காகன் உள்ள தெருவிலேயே தொடங்கினார் கரிமா. கா வின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கு பின்பும் இந்தியாவின் பழமையான உணவு தயாரிப்பு செய்முறையை கொண்டுள்ளது. தான் எதை விரும்பினாரோ அதை கரிமா தற்போது உலகத்தின் சுவை மொட்டுகளுக்கு விருந்தாக படைத்து வருகிறார்.

இந்த விருதினை பெறுவது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், காலங்காலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் ஒரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்துவதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து சர்வதேச அளவில் வழங்கப்படும் மிச்செலின் ஸ்டார் விருதினை பெறும் முதல் பெண்ணான கரிமாவுக்கு நாமும் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வோம்.

Advertisement:

Related posts

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

Niruban Chakkaaravarthi

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் இணையும் யோகி பாபு

Karthick

சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!

Nandhakumar