மத்திய அரசுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில், பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 38ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் நடத்திய முதல் 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் யுத்வீர் சிங், 50 சதவிகித பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்று பரவி வரும் தகவல் தவறானது என கூறினார். விவசாயிகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்வதுபோல் தெரிவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஜனவரி 6ஆம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்றும் யுத்வீர் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு எடுக்கப்படலாம் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரத்தில், நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தை இறுதியான பேச்சுவார்த்தையாக இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும், நடப்பதை முன்கூட்டியே கணிக்க தான் ஜோதிடர் இல்லை என்றும், அவர் கூறினார்
Advertisement: