வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர், குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கட்சியினர் புறக்கணித்ததற்கு அதிருப்தி தெரிவித்தார். கொரோனா கால சவால்களை முறியடித்த இந்தியா, உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக குறிப்பிட்டார். மூன்றாம் உலக நாடு என்றழைக்கப்பட்ட இந்தியா, தற்போது உலகத்துக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கி வருவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு எப்போது இல்லாத வகையில் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், இது சாதனை அளவு என்றும் அவர் கூறினார். தற்போது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் நாடாக இந்தியா இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
வேளாண் சீர்திருத்தங்கள் பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் வேளாண் சீர்திருத்தங்கள் கட்டாயம் தேவை என தெரிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை எனக் கூறியதோடு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் நடைமுறை தொடரும் என்றும், அந்த முறை எப்போதும் கைவிடப்படாது என்றும் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
Advertisement: