இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களும், இந்திய அணி 337 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 178 ரன்கள் எடுத்த நிலையில், 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
கடைசி நாள் ஆட்டமான இன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், சுப்மான் கில் 50 ரன்களும் குவித்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 192 ரன்களில் சுருண்டது.
இதன்மூலம், 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற டெஸ்ட் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே, உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: