பென்னாகரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. கணவனை இழந்த இவர், மாற்றுத்திறன் கொண்ட தனது மகளுடன் வசித்து வருகிறார். அந்த பெண் தற்போது அங்குள்ள அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்ற அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த செல்வி அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடினார். இதனால், சந்தேகமடைந்த செல்வி
வேகமாக சென்று தனது மகளிடம் விசாரித்தபோது, தப்பியோடிய நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வி இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய நிர்வாகி கோவிந்தராஜ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.