அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநரை சந்தித்து திமுகவினர் பொய் புகார் செய்ய முயல்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயரின் 167வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வறுமையில் இருந்த போதும் தமிழுக்கு தொண்டாற்ற பாடுபட்டவர் உ.வே. சாமிநாத ஐயர் என புகழாரம் சூட்டினார்.
தமிழக அமைச்சர்களின் இரண்டாவது ஊழல் பட்டியல் தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று மாலை ஆளுநரை சந்திப்பது வெறும் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்ற அவர், நேருக்கு நேர் வந்து விவாதம் செய்தால் முகத்திரை கிழிந்துவிடும் என்பதாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் ஆளுநரை சந்தித்து பொய் புகார் அளிக்க திமுகவினர் முயல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.அதிமுகவினருக்கு மடியில் கனமில்லாததால், வழியில் பயமில்லை என கூறினார்.
மேலும், சசிகலா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என்ற ஜெயக்குமார், சசிகலாவிற்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் அதிமுகவிற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்ற தீர்ப்பில் இனி மாற்றம் இருக்காது எனவும்,பொதுக்குழு கூட்டி கட்சியில் இருந்து முழுமையாக சசிகலா மற்றும் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் எனவும் உறுதிபட தெரிவித்தார்.