ஈரோடு அருகே சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை உள்ளது. தடையை மீறி விற்பனைகள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பெத்தாம்பாளையம் பிரிவுப் பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரை ஓட்டி வந்த கணவரும், உடன் வந்த மனைவியும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை அவர்கள் சீட்டுக்கடியில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் கணவன் மனைவி இருவரும் கடந்த பல ஆண்டுகளாகவே மாநில எல்லைப் பகுதியான வனப்பகுதியில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பாக்கெட்டுக்களாக தயாரித்து காரில் மறைத்து அவற்றை விற்பனையாளர்களிடம் விநியோகித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.
Advertisement: