கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும், பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 முதல் 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதன் மூலம் சுமார். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறுகிய கால பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டா, பட்டா போன்ற ஆவணங்களுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையீட்டின் பேரில் பெறப்பட்டுள்ள வேளாண் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், வேளாண்மை சாராத இனங்களுக்கு வழங்கப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement: