அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக, கலை, அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்து பருவத் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்தது. தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப்பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? அதில் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து பல்கலைக்கழக வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த தாக்கல் செய்த வழக்குகளை ஏப்ரல் 15க்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
Advertisement: