திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்துள்ள மேல்மலை கிராமமான பூம்பாறையில், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தான், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் என்றார். மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பல ஆண்டுகளான போதும், ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் தற்கொலைகள் அதிகரிப்பதால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய உதயநிதி, இரண்டு மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், இன்னும் பத்து நாட்களில் தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளாதாகவும் தெரிவித்தார்.
Advertisement: