ஐந்து மாத குழந்தை டீரா காமத்தின் உயிரை காப்பாற்ற தேவையான மருந்தின் இறக்குமதி வரியான ரூ.6 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரியங்கா, மிஹிர் தம்பதியின் ஐந்து மாத பெண் குழந்தை டீரா காமத். குழந்தை பிறந்தது முதலே அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயை குணப்படுத்துவதற்கு Zolgensma என்ற மரபணு மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. அதனால், அந்த சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அந்த சிகிச்சை செய்ய Zolgensma என்ற மருந்து தேவைப்பட்டது. அந்த மருந்தின் விலை சுமார் 16 கோடி ரூபாய். ஆனால் அந்த மருந்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.
குழந்தையின் பெற்றோர்கள் சமூகவலைதளங்களின் மூலம் மருந்துக்கு தேவையான தொகையை பெற்றனர். ஆனால், அந்த மருந்துக்கு இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி மட்டுமே சுமார் ஆறு கோடி ரூபாய் வரை அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இதனால், டீராவின் பெற்றோர் மேலும் கலக்கத்துக்குள்ளாகினர். இதையடுத்து, அவர்கள் கடைசியாக மத்திய அரசை அனுகினர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மருந்துக்கான ரூ.6 கோடி மதிப்பிலான இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தனர்.
Advertisement: