15 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிரை புத்தாண்டு தினமான இன்று தலைநகர் டெல்லி சந்தித்துள்ளது.
இந்தியாவில் குளிர்காலங்களில் அதிகப்படியான குளிர் பதிவாகும் நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருந்து வருகிறது. இதனிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் புத்தாண்டு தினமான இன்று டெல்லியின் குளிர் 1.1 டிகிரி செல்ஸியஸ் ஆக சரிந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் பனிப்போர்வைக்குள் மூடியதுபோல் உள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு 2.4 டிகிரி செல்ஸியஸ் என்பதே டெல்லியின் அதிகபட்சமான குளிராக இருந்தது. இது தொடர்பாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா, மிக அடர்த்தியான மூடு பனி டெல்லியின் சப்தர்ஜங் மற்றும் பாலம் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் காணப்பட்டது. ஜனவரி 2 முதல் ஜனவரி 6 வரை வடமேற்கு இந்தியாவில் வெப்பநிலை உயரத்தொடங்கும், குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி 4-5 க்குள் 8 டிகிரி செல்சியஸாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குளிர் அலை நிலைகள் இன்று நீட்டிக்கும் என தெரிவித்த அவர் ஆனால் வெப்பநிலை நாளை முதல் உயரும் எனவும் தெரிவித்தார்.
Advertisement: