செய்திகள் தமிழகம்

தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்

சட்டமன்றத் தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர் சரத்குமார் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைந்தார். தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நாங்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார் சரத்குமார். அப்போது திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில் கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சரத்குமார் மற்றும் சமக மகளிர் அணிச் செயலாளர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பதை அறிவிப்போம் எனவும், தற்போது அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கூட்டணியில் எத்தனை தொகுதிகள் எதிர்பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “ 234 தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம்” என நகைச்சுவையாக பதிலளித்தார். மேலும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், இந்த பட்ஜெட் பயனளிக்குமா என்பதற்கு காலம் தான் பதில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் கையில் வேல் கொடுக்கப்பட்டது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு இன்றைய சூழலில் வேலை தூக்குவது ஒரு பேஷனாகி விட்டது என்றார். அதிமுக கூட்டணியில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் என சுருக்கிக் கொள்ளாமல் குறிப்பிட்ட அளவிலான இடங்களைக் கேட்டுப் பெறுவோம் எனவும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார். சசிகலா வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தற்பொழுது தெரியாது என தெரிவித்த சரத்குமார், சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அவர்களது தனிப்பட்ட விவகாரம் எனவும் பதிலளித்தார்.

Advertisement:

Related posts

சித்த மருத்துவர்களில் வாரிசுகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு அங்கீகாரம்?

Niruban Chakkaaravarthi

மதுரையை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ!

Jeba

வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள்!

Jeba

Leave a Comment