கட்டுரைகள் முக்கியச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?


த.எழிலரசன்

கட்டுரையாளர்

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருக்கும் சந்தேகம் மற்றும் தயக்கங்களை தீர்த்து வைக்கிறது இக்கட்டுரை.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சீரான வேகத்தில் நகர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு என்பதும் கடந்த இரண்டு வாரங்களில் படிப்படியாக குறைந்துகொண்டே உள்ளது.

கொரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் மட்டும் வழக்கமான மரபுகள் அனைத்தும் தலைகீழாக மாறியது. ஏனெனில், ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தபட்சம் 10 வருடங்களாவது தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் 40 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட போதிலும் எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடம் கூட முடியாத நிலையில், அதற்குள் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பெரும்பான்மை மக்களுக்கு செலுத்தப்பட்டும் வருகிறது.

தடுப்பூசியில் ஏன் தயக்கம்?

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே தடுப்பூசியின் அவசரத் தேவை காரணமாக அதற்கான ஆராய்ச்சி மற்றும் உருவாக்கப் பணிகள் படுவேகத்தில் சென்றன. ஆனால், தடுப்பூசி முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வந்தபோதுதான் அதனை ஏற்க மக்கள் தயக்கம் காட்டினர். கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதில் இருந்த தயக்கம், மற்ற தடுப்பூசிகள் அறிமுகமானபோதும் இருந்ததுதான். எனினும், பெருந்தொற்று காலத்தில் தவறான தகவல்கள் வேகமாக பரப்பப்படுவதால் கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை தடுப்பதில் பல்வேறு சவால்கள் நிலவுகின்றன.

கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் குறித்து 19 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று நேச்சர் மெடிசன் இதழில் வெளியானது. அதில், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் அனைத்து வயதிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு ஒரு தயக்கம் இருந்தது. கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டதும் அதிக தயக்கத்திற்கான காரணமாக மாறியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட பாதகமான நிகழ்வு காரணமாக 2020 செப்டம்பர் மாதம் தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது கவலைகளை அதிகரிக்கச் செய்தது. இந்த ஒரே ஒரு சம்பவம்தான் மக்கள் மத்தியிலான நம்பிக்கையை சிதைத்ததாக நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் இதழின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடிவெடுக்கும் ஒரு நபரின் உணர்வுகள் என்னவாக இருக்கிறது என்பதையும் ஆய்வு விரிவாகக் கூறுகிறது.

இதற்கு முந்தைய கால கட்டங்களில் கூட தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருந்த தயக்கம், சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்களை தடுத்துள்ளது. இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், அரசு சதி செய்து குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுவார்கள் என அவர்கள் பயந்தனர். தடுப்பு மருந்துகளை தொடர்ந்து மறுத்ததன் விளைவாக முற்றிலும் தடுக்கக்கூடிய அல்லது மீண்டும் வருவதை தடுக்கும் வகையிலான டெட்டன்னஸ், கக்குவான் இருமல் மற்றும் தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் அதிகமாக ஏற்பட்டன. தற்போதைய கொரோனா பெருந்தொற்று நேரத்தில் தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கம் மற்றும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்தான் மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறார்.

பக்க விளைவுகள் வருவது உண்மையா?

அனைத்து தடுப்பூசிகளிலும் நேர்மறையான விளைவுகளுடன் பக்க விளைவுகளும் ஏற்படுவது வழக்கம்தான், கொரோனா தடுப்பூசி மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு இரண்டு வகையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. தடுப்பூசி செலுத்தியவருக்கு செலுத்திய உடன் வலி ஏற்படுகிறது அல்லது செலுத்திய இடம் சிவந்திருப்பது, வீக்கமாக இருப்பது முதல் வகையில் (localized) நடைபெறும். இது அடுத்த 48 மணி நேரத்தில் சரியாகிவிடும்.

இரண்டாவது வகையில் (Systemic) நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி மருந்துடன் சண்டையிடுகிறது. இதனால், காய்ச்சல், நெருடலான உணர்வு மற்றும் மந்தநிலை ஏற்படும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செல்களுக்கு உதவுகிறது. மறுபுறம் எந்த பக்கவிளைவுகளும் இல்லையென்றால் கொரோனா தடுப்பூசி சக்திவாய்ந்தது இல்லை என்றும் அர்த்தம் கிடையாது.

மிகவும் குறைவாகவே அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) என்னும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில், கடுமையான ஒவ்வாமை, குமட்டல், வாந்தி, தோல் அரிப்பு உள்ளிட்ட தீவிரமான பக்க விளைவுகள் வரும். ஆனாலும் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். லட்சத்தில் ஒருவருக்கு அனலாக்சியா ஏற்படும் என்பதை விட, கொரோனா பாதிப்பால் 780 பேருக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்பதுதான் அதிக பாதிப்பாக இருக்கிறது. ஆகவே, நாம் இதற்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பாதக நிகழ்வுகள் நடந்ததா?

கொரோனா தடுப்பூசி குறித்த எதிர்மறையான செய்தி நார்வே நாட்டிலிருந்து வந்தது. அங்கு பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் உயிரிழந்தனர். அடுத்த சில நாட்களில் இதனை மறுத்த நார்வே மருத்துவ அமைப்பு, கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிட்டது.

இதுபோலவே வட இந்தியாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு, அதன்பிறகு வலிப்பு ஏற்பட்டது. ஆனாலும், அவருக்கு ஏற்கனவே டெங்கு இருந்துள்ளது, அதனுடனே தடுப்பூசியை செலுத்தியதன் காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது.

தயக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது?


பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம்தான் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மிக்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். தடுப்பூசியின் பயன்களை சரியான முறையில் கொண்டு செல்வது, அபாயங்களை ஒப்புக்கொள்வது ஆகியவை மக்களின் நம்பிக்கையை பெறுவதில் முக்கியமானது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் தடுப்பூசி தொடர்பான பயத்தை நீக்க முடியும் எனவும் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது, பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக தடுப்பூசி எண்ணிக்கை உள்ளது. தடுப்பூசி தொடக்க நிலையில் செலுத்தும் நிலையிலேயே, உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. ஆக, இந்த தடுப்பூசிதான் நம்முடைய அறிவியல் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

நன்றி: Health Analytics Asia

மொழிபெயர்ப்பு: த.எழிலரசன்.

Advertisement:

Related posts

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்: டிடிவி தினகரன்

Saravana

நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

Saravana

புதிய வகை கொரோனா 70 நாடுகளுக்கு பரவி உள்ளது: உலக சுகாதார அமைப்பு

Niruban Chakkaaravarthi